Hisam Hijas
View Profile →கண்டி முஸ்லிம் ஹோட்டலின் உரிமையாளர்களின் பூர்வீகம் தமிழ்நாட்டின் சிங்கம்பத்து என்னும் ஊரிலிருந்து ஆரம்பமாகின்றது. ஒருமுறை ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாக்ஷிமிய்யி அவர்களின் தகப்பனாரும் நமது செய்கு நாயகம் அவர்களின் பாட்டனாருமாகி ஜமாலிய்யா மௌலானா அவர்கள் சிங்கம்பத்து சென்றிருந்தார்கள்.
அன்று ஜமாலிய்யா மௌலானா அவர்களை சந்தித்த, கண்டி முஸ்லிம் ஹோட்டலின் ஆரம்ப கர்த்தாக்களான, சின்ன முதலாளி மற்றும் பெரிய முதலாளி (அவர்கள் பெயர் சரியாகத் தெரியவில்லை) என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இருவரும் தமது வறுமையான நிலையை கூறி, வருந்தி தாம் இலங்கை சென்று ஒரு சிறு தொழில் ஆரம்பிக்கட்டுமா, அது நல்லதுதானா என்று அனுமதியும் துஆவும் கேட்டு நின்றார்கள்.
தன்மீது மிகுந்த அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருந்த அவர்கள் குடும்பம் படும் துயரத்தை அறிந்த ஜமாலிய்யா மௌலானா அவர்கள், "நல்லது நீ அங்கு போய் ஒரு தொழிலை ஆரம்பம்செய், பெருத்த செல்வத்துடன் வாழ்வாய்" என்று துஆச் செய்தார்கள்.
அதன்படி, இலங்கை வந்த அவர்கள் இருவரும், கண்டி மாநகரில் ஒரு சிறுகடை வைத்தார்கள். கண்டியில் உள்ள தமது கடைக்கு ஜமாலிய்யா மௌலானா அவர்களை அழைத்துச் சென்ற அவர்கள், கடையை காண்பித்து, தங்கள் தொழில் செழிப்புடன் நடக்க மீண்டும் துஆ வேண்டி நின்றார்கள். தனது கையை சுற்றிக் காட்டி, "இது எல்லாம் உங்களுக்கு வந்து சேரும், நீங்கள் பெரும்கொண்ட செல்வத்துடன் வாழ்வீர்கள்" என்று துஆத் செய்து வாழ்த்தினார்கள்.
அஹ்லுல் பைத்துக்களான வலிமார்களின் துஆ ஒருபோதும் வீணாகாது. அவர்கள் சிறுக, சிறுக பணம் சேர்த்து கண்டி முஸ்லிம் ஹோட்டலை ஆரம்பித்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ஜமாலிய்யா மௌலானா அவர்களும் மறைந்தார்கள். அவர்கள் மறைவின் பின்னர் அவர்கள் மகனார் ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌவானா அவர்களின் துஆவினால் அவர்கள் வியாபாரம் மேன்மேலும் சிறப்புற்றது. அது பரந்து விரிந்து, கண்டி மாநகரிலும், முழு இலங்கையிலும் புகழ்பெற்றது. அவர்கள் இருவரும் பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள்.
கண்டியில் இருந்த ஒரே ஒரு பிரபலமான முஸ்லிம்களின் வியாபார நிறுவனமாக அது மாறியது. ஹோட்டல் துறை மற்றும் இன்னும் பல துறைகளிலும் அவர்கள் முன்னேரினார்கள். பல தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் மாறினார்கள்.
தமது புனித இடமான கண்டி தலாதா மாளிகை முன் இப்படி ஒரு ஹோட்டல் பெரும்புகழுடன் இருப்பதை சிங்களவர்களில் சிலர் விரும்பவில்லை. சகல வழிகளிலும் இடைஞ்சல் செய்தனர். பல வழக்குகளைப் போட்டு அங்கிருந்து அவர்களை வெளியேற்ற கடும் முயற்சி செய்தனர். இறுதியாக கண்டி முஸ்லீம் ஹோட்டல் அதன் உரிமையாளர்கள் வசமே என்றும் இருக்கும் என்ற தீர்ப்பு வந்தது. இப்படி சகல தடைகளையும் எதிர்த்து சங்கை மிகு யாஸீன் மௌலானா அவர்களின் துஆ பரக்கத்தால் உரிமையாளர்கள் வெற்றி பெற்றனர். 100 வருடங்களைத் தாண்டி கண்டி முஸ்லீம் ஹோட்டல் சிறப்புடன் இன்றும் கம்பீரமாக காட்சிதருகின்றது.
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size






